Sunday, November 10, 2013

நண்பர்களுக்கு செய்வினை வைப்பது எப்படி .?

நண்பர்களுக்கு செய்வினை வைப்பது எப்படி .?

1. கருப்பு கூலிங் கிளாஸ் வாங்கி தரனும் . " தல தல" ன்னு தான் அவன கூப்டனும். 

2. "அவ உன்ன தாண்டா பாக்குறா !! " என்ற மந்திரத்தை அப்போ அப்போ சொல்லனும்.

3. காதல் என்றது ஒரு பபுள் கம் மாதிரி ஒட்டுனா எடுக்கிறது கஷ்டம் , மெள்ள மெள்ள இன்பம் ..காதல் பான்பராக் மாதிரி துப்புனாலும் சாயம் போகாது.. இந்த மாதிரி தத்துவம் சொல்லணும் .காதல் மேல ஒரு கான்பிடன்ஸ் கிரியேட் பண்ணனும்

4. நல்ல DSLR கேமரா வச்சி profile picture எடுத்து தரனும் . ப்ரொபைல் பிக்ச்சரா வச்சிகோடா ன்னு சொல்லனும்.

5. மச்சி உன் கேரக்டர் அப்படியே "ஜில்லுனு ஒரு காதல் " புட்பால் ப்ளேயர் சூர்யா மாதிரி Rough and Tough ஆ இருக்குனு சொல்லணும். நீ பேன்ட் குள்ள கைய்ய விட்டு நடந்தா சச்சின் படத்துல வர விஜய் மாதிரியே இருக்கனு சொல்லணும்.

6. Spelendor வாங்கலாம்னு இருக்கவன் கிட்ட "மாம்ஸ், உன் கெத்துக்கு நீ எல்லாம் R15, Thunderbird வாங்கணும் டா " ன்னு சொல்லணும் . அதுக்கு அவன் பெட்ரோல் காசுக்கு கிட்னிய விக்க வைக்கணும் .

7. SRM Confessions, CTS ,TCS confessions பேஜ் க்கு போயி "டியர் ரவி , நான் உன்ன ரகசியாமா டாவ் அடிக்கிறேன்.. பல்லு வெளக்காம நீ கேண்டீன்ல காப்பி குடிக்கிற அழகை ரசிக்கிறேன்...ச்சோ ச்வீடு டா " ன்னு நாமலே பொண்ணு பேருல போஸ்ட் பண்ணனும் .

8. " நீ Hair straitening and burgundy coloring பண்ணா டாம் க்ரூஸ் மாதிரியே இருக்கும் நண்பா... Naturals போய் பாரேன் ன்னு சொல்லி அவன முடிவெட்ட 3000 ருபாய் அழவைக்கணும்

9. மைக்ரோ டிப் பென்சில் மாதிரி இருக்கிற தனுஷே சிக்ஸ் பேக் வைக்கிறார்...நீ எல்லாம் எறங்கி பாடி ஏத்துனா மரண மாசு மாப்ள னு சொல்லி " உசுபேத்தனும் . ஜிம்முல சேர்ந்து மாசம் 500 ரூபாய் அழுவான்.

10. மெரினா ல பாணி பூரி, மொளகா பஜ்ஜி வாங்கி தின்னுகிட்டு இருந்தவன பதமா KFC, McDonald கூட்டிட்டு போயி வாங்கி சாப்பிட வைக்கணும்...பயபுள்ள எப்படியும் ஒரு பொண்ணுகிட்ட பந்தா காட்டவாச்சும் நம்மள கழட்டி விட்டுட்டு அப்புறம் அங்க போவான்.. KFC என்பது "ஒரு வழி பாதை " போனா திரும்ப முடியாது.. மாச கடசில அவன் பர்சு அவன பாத்து காரி துப்பும்.

To be cont...

யோசனைகள் வரவேற்கப்படுகின்றன ..

சட்டுபுட்டுனு ஒரு கதை -15

வெடிகுண்டுகள் பின்னணியில் வெடிக்க, ஹெலிகாப்டர்கள் குண்டு மாரி பொழிய பொழிய அந்த Chase போய்க்கொண்டே இருந்தது . ஒருவரை ஒருவர் சுட்டுக்கொல்ல எத்தனித்த அந்த இருவரும் அவர்களது Plasma gun நின் ட்ரிக்கரை விடாமல் அழுத்திய படி இருந்தனர். தீபக்கிற்கு ஒரு விரல் குண்டு பட்டு துண்டாகி விழுந்து. விஸ்வாவின் குறி தவறவே இல்லை. 

அந்த வலியிலும் தேடி தடவி ட்ரிக்கரை தீபக் அழுத்திய நொடியில் விஷ்வாவின் வலது கண் பிதுங்கி வெளியே வந்து விழுந்தது.

தோட்டாக்கள் தீர்ந்து போனதால் கத்தியை எடுத்து விஷ்வாவின் மேல் தீபக் பாய்ந்த நேரத்தில்
.
.
.

" டேய் ..இப்போ சாப்பிட வரீங்களா இல்ல வந்து அந்த வீடியோ கேம ஆப் பண்ணவா ?...அப்படி என்னதான் இருக்கோ இந்த விடா கேம் ல "

என அம்மாவின் அதட்டல் கேட்டதால் Pause பட்டன் அமுக்கிவிட்டு சாப்பிட சென்றனர் விஷ்வாவும் , தீபக்கும் .

அவர்களின் வீடியோ கேம் ரோபாட் மனிதர்கள் அதே கொலைவெறியுடன் pause பட்டன் ரிலீஸ் ஆக வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தனர்.

( அதே நேரம் , பிரபஞ்சத்தின் இன்னொரு பரிமாண வெளியில் ஒரு தாய் ரோபாட் அதட்ட pause அமுக்கி விட்டு ஓடின இரண்டு ரோபட் குட்டிகள். அவர்கள் ஸ்க்ரீனில் விஷ்வா தீபக் என்ற இரண்டு மனிதர்கள் துப்பாக்கி ஏந்தி அதிக கொலைவெறியுடன் காத்திருந்தனர் . )

நகைமுரண்கள் பெரியாரிஸ்ட்டுகள் , தமிழ்தேசியவாதிகள் :

நகைமுரண்கள் பெரியாரிஸ்ட்டுகள் , தமிழ்தேசியவாதிகள் :

இந்து மதத்தை மானாவாரியாக கிண்டல் அடித்துவிட்டு இசுலாமிய நெறி பரப்பும் "இஸ்லாமிய பெரியாரிஸ்ட்டுகள் ",

"இஸ்லாமிய தீவிரவாதிகள் !! ஐயோ அம்மா !! " என்று கதறிவிட்டு காவி தீவிரவாதத்தை கண்டு கம்மென்று இருக்கும் இந்து பெரியாரிஸ்டுகள் ,

IPL போட்டிகளை என்ஜாய் பண்ணிவிட்டு , மும்பை இந்தியன்ஸ் ராக்ஸ் என்று ஸ்டேடஸ் போட்டுவிட்டு தனித்தமிழ் தேசியம் வாழ்க போடும் தமிழ்தேசியவாதிகள் ,

விடுதலைப்புலிகளை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்று கூறிய தெய்வீக அம்மையாரை "ஈழத்தாய் " என்று கூறும் தமிழ்தேசியவாதிகள்

சிலைவழிபாடு தவறு என்று கூறிவிட்டு குருபூஜைக்கு பழம் பால் எல்லாம் வைத்து படைக்கும் குருபூஜையை வரவேற்கும் பெரியாரிஸ்ட்டுகள் ,

"தமிழ்ல பேசுறவன் மட்டும் தான் தமிழன் , வந்தேறிகளே வெளியேறுங்கள் !!" என்று கொக்கரித்துவிட்டு சவ்க்கார் பேட்டையில் பாணி பூரி விற்பவன் , சுற்றுலா வந்த புத்த பிட்சு , பெண்கள் சிறுவர்களை அடித்துவிட்டு "நாம் தமிழர் டா " என்று மார்தட்டிவிட்டு ஹோட்டலில் Server ரிடம் இங்லிபீசு பேசி தமிழுணர்வு காட்டும் தமிழர்கள் ,

என்று தங்கள் வசதிக்கு ஏற்ப பெரியாரிசம் , தமிழ்தேசியவாதம் ஆகியவற்றை வளைத்துக்கொள்ளும் ஆட்கள் இருகின்றவரை ஆரிய அடிமைத்தனம், தீபாவளி தமிழர் பண்டிகையா இல்லையா ? தமிழ் புத்தாண்டு எது என்றெல்லாம் விவாதிப்பது பயனற்றதாகவே தெரிகிறது. தேவையும் இல்லாதது .

பெரியாரின் பெயரை சொல்லிக்கொண்டு இந்து பாசம் , இஸ்லாமிய பாசம் காட்டுவதற்கு அவர்கள் வாய் மூடி சும்மா இருக்கலாம்.

தமக்கு வேண்டிய வகையில் ஒரு நம்பிக்கையை வளைத்துக்கொள்ளும் இடத்தில இருந்து தான் ஜாதி, மதம் ஆகியவை தொடங்குகின்றன என்பதை அறிந்தால், "இந்து பெரியாரிஸ்ட் " "இஸ்லாமிய பெரியாரிஸ்ட் " " IPL தமிழ்தேசியவதி " " பாணிபூரி விற்பவன் வந்தேறி , வந்தேறி வெளியேறு இயக்கத்தினர் " என்று எக்கச்சக்க போலிகள் உருவாகி இருக்காது.

தீபவாளி ஒரு வழியாக கடந்துவிட்டது . அடுத்து கிறிஸ்மஸ் வருகிறது. இயேசு நாதர் தமிழன் அல்ல , கிறிஸ்மஸ் தமிழ் பண்டிகை லிஸ்ட்டில் சேராது என்றும் சில பெரியாரிஸ்ட்டுகள் , தமிழ்தேசியவாதிகள் கூறுவார்களா என்று பார்ப்போம்.

எதிர்க்கப்படவேண்டிய ஆரியம் எல்லாம் சிறியதுதான். ஆனால் மிக மிக சீக்கிரமா சீர்திருதப்படவேண்டியது போலி பெரியாரிசமும் , போலி தமிழ் தேசியவாதமும் தான் .

ஏனோ இன்று தங்கள் படம் அச்சிடப்பட்டு கடைகளில் தொங்கும் பனியன்களில் மட்டுமே பெரியாரும் , சே குவேராவும் இணைந்து நிற்கிறார்கள்.

Monday, October 28, 2013

ஹிந்தி டியுஷன் (ஒரு சிறுவனின் சுதந்திர போராட்டம் )

ஹிந்தி டியுஷன் (ஒரு சிறுவனின் சுதந்திர போராட்டம் )

இது கொஞ்சம் சுய தம்பட்டம் அடிக்கும் பதிவு தான். இவனுக்கு வேற வேலையே இல்லன்னு நெனைக்கிறவங்க இப்போவே வேற நல்ல ஆட்கள் ப்ளாக் படிக்க போய்டுங்க. வேலையே இல்லாதவங்க, வேல பாக்குற மாதிரி நடிக்கிறவங்க மேற்கொண்டு படிக்கலாம்.

1996 ல நாங்க மதுரை வந்திருந்த புதுசு . ஒரு நல்ல ஸ்கூல் ல சேர்த்து விட்டாங்க அப்பா அம்மா . தமிழ் ல மட்டுமே பாடாத படிச்சிட்டு வந்த பையன் . மதுரை ல அந்த ஸ்கூலு நல்ல பீட்டர் விடுற ஸ்கூலு வேற...தினம் தினம் பள்ளிகூடத்துல சப் டைட்டில் இல்லாம இங்கிலீஷ் படம் பார்த்திட்டு வந்தேன்...ஆல் பீபில் ஸ்பீகிங் இங்கிலீஷ். ஐ ஜஸ்ட் வாட்சிங் நத்திங் புரிஞ்சிபயிங் ...
ஒரு நாளை ஸ்கூல்ல ஓட்ரதே நமக்கெல்லாம் பெரிய யுத்தம் மாதிரி இருந்துச்சி..

அப்போதான் என்னைய பெத்த அந்த தியாகி, அதாங்க எங்க அப்பா ஒரு அணுகுண்ட என் நாடு மண்டையிலயே போட்டாரு...

எஸ்..
என்னைய கொண்டு போய் ஒரு ஹிந்தி டியுஷன் ல சேத்துவிட்டாரு...எனக்கு முந்தின காலத்திய இளவட்டங்கள் டைப் ரைட்டிங் , ஷர்ட் ஹாண்டு கிளாஸ் , எல்லாம் போயி சைட் அடிச்சி வாழ்க்கைய என்ஜாய் பண்ணி வச்சிருந்தாங்க....
ஆனா நம்ம நெலம ஒரு ஹிந்தி டியுஷன் ல வந்து நின்னுடிச்சே ன்னு ஒரு மைல்டு பீலிங்க்ஸ்....

அங்க போனா நமக்கு ஸ்கூலே தேவலாம் ன்னு தோனுற அளவுக்கு வாட்டி எடுத்தாங்க...இங்கிலீஷ் புரியாம ஸ்கூல் ல நின்னுகிட்டு இருந்தா , சாயிங்காலம் ஹிந்தி.... புரியாத பாஷை ரெண்டு வந்து அட் எ டைம் ல மண்டையில இறங்கவும் கிர்ருனு ஆகிடுச்சி....
என் வயசு பசங்க எல்லாம் அங்க கிரிக்கெட் வெளையாடுற நேரத்துல நம்மள கொண்டு போய் ஹிந்தி படிக்க வச்சா எப்படி படிப்பேன் ??...ரகள தான் அங்க....நம்மள விட சின்ன சின்ன பசங்க அங்க ஹிந்தில பின்னி பெடல் எடுத்துகிட்டு இருந்துசிங்க...

முடிவு பண்ணேன்...இனிமே இங்க இருக்க கூடாது....வேற எதாச்சும் கிளாஸ் போகணும்னு ...அப்போ தான் கமல் நடிச்ச இந்தியன் படம் ரிலீஸ் ஆகி இருந்துச்சி...ஊரு பூரா வர்மக்கலை வர்மக்கலை வர்மக்கலை பைத்தியமா திரிஞ்சிகிட்டு இருக்காங்க ...ஏற்கனவே சிலபல ஜெட்லி , ஜாக்கி படம் எல்லாம் பார்ததால நமக்கும் அந்த பைத்தியம் தொத்திகிச்சி ...விஷ்க்க் விஷ்க்க் ன்னு கமல் மாதிரி வர்ம குத்து குத்திகிட்டு திரிஞ்சேன்....மனசு பூர ஒரே martial arts மையம் தான்...ஹிந்தி வாத்தியாரு திட்டுரப்போ " salute the flag!! " ன்னு ஒரு பிரிட்டிஷ்காரன் கத்துரப்போ கமல் சார் வந்து ஒரு ஈட்டி எறிவாரு பாருங்க, அந்த மாதிரி ஒரு கோவம் வரும்...கோவத்துல கூட இந்தியன் படம் தான் ஆக்கிரமிச்சி இருந்துச்சி

ஹிந்தி வாத்தியாரு ஒரு பக்கம் படுத்தி படுத்தி எடுக்கிறார்..நாம ஒரு லாஸ்ட் பெஞ்ச் அண்ணாச்சின்னு அவருக்கும் தெரிஞ்சி போச்சு....தேறவே மாட்டன் ஹிந்தில ன்னு ஒரு முடிவுக்கு வந்தாரு போல.எல்லா கிளாஸ் ல யும் குறிவச்சி நம்மள கேவல படுத்தினாரு.சொல்லிவச்ச மாதிரி நாம தான் அங்க லாஸ்ட் மார்க். ஒரு டெஸ்ட் ரெண்டு டெஸ்ட் இல்ல.எல்லா டெஸ்ட்ல யும் லாஸ்ட்டாவே வந்தேன்..நம்மள எல்லார் முன்னாடியும் , குறிப்பா சின்ன பசங்க முன்னாடியும் " நீ எல்லாம் ஹிந்தி படிச்சா வெளங்கிடும் " ன்னு திட்டுவாரு..அதுலயும் ஏதோ ஹிந்தில சொல்லுவாரு எல்லா பிள்ளைகளும் சிரிக்கும்..நமக்கு தான் subtitle இல்லாம எதுவுமே புரியாதே கம்முனு நிப்பேன்....மனசு பூர இந்தியன் படத்துல வர சேனாதிபதி கதாபாத்திரம் தான் நிக்கிது ....

அன்னைக்கி பாத்து ஒரு லிஸ்ட் எடுத்துகிட்டு வந்தாரு ஹிந்தி வாத்தியாரு...மார்க் பிரகாரம் எல்லாரோட பேரும் இருக்கு அதுல..வழக்கம்போல நாம தான் லாஸ்ட் ..

என்னைய மெதுவா கூப்பிட்டு லிஸ்ட என் கையில குடுத்தாரு வாத்தியாரு... என்னைக்கு தான்டா உன் பேரு இந்த லிஸ்டுல டாப் ல வரும் ?? நு கேட்டாரு...

உடனே அந்த லிஸ்ட தலைகீழா திருப்பி பிடிச்சி சொன்னேன் " இப்போவே வந்துருச்சி பாருங்க சார் " ன்னு ...அப்புறம் அவங்களே நம்மள "அன்பும் மரியாதையும் " குடுத்து வெளிய தொரத்திவிட்டாங்க..

ஜாலியா இருந்தேன்...அடிச்சி பிடிச்சி மாப்பிளை விநாயகர் தியேட்டர் பக்கம் இருக்கிற ஒரு கராத்தே கிளாஸ் ல போய் சேர போனேன்...

கிட்டத்தட்ட ஒரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி , அதுல ஜெயிச்சி அங்க போய் நின்னா

" கியா சாயியே ?? " ன்னு கேட்டுகிட்டு ஒரு மொரட்டு ஆளு வெளிய வராரு ....

யெஸ் .....மாஸ்டர் ஒரு ஹிந்திகாரன் !!

தன்யவாத் ...

Saturday, October 26, 2013

Gravity ..( என்னை "ஈர்த்த" சினிமா )

Gravity ..(   என்னை "ஈர்த்த" சினிமா )

ஒருவழியாக  Gravity பார்த்துவிட்டேன் .

90 நிமிடம். தட தட என எந்த தொய்வும் இல்லாமல் கதை நகர்ந்தது.

இரு பிரதான கதாபாத்திரங்கள் .  ரயன் ஸ்டோன் ,மாத்தியு கௌலாஸ்க்கி ஆகிய லீட் ரோலில் Sandra Bullock, (ஸ்பீட் படத்துல ஸ்பீடா பஸ்சு ஓட்டுன அதே புள்ள..) George Clooney ( அந்த ஊரு சால்ட் அண்ட் பெப்பர் அஜித்  ) ஆகியோர் கனகச்சிதமாக பொருந்தி நடித்துள்ளனர்.

அமெரிக்காவின்  Hubble's Telescope பில் ஏற்ப்பட்ட ஒரு பழுதை சரி செய்ய இருவரும் விண்வெளி பயணம் செய்கின்றனர். ரயனுக்கு இது முதல் பயணம். ரிட்டையர்ட் ஆகும் முன் மேட் க்கு இது கடைசி பயணம் . 

ரஷ்யர்கள் தங்கள் பழுதடைந்த ஒரு செயற்க்கைகோளை உடைக்க ஏவும் ஒரு ஏவுகணை அதை வெடித்துச்சிதற செய்கிறது. அதிலிருந்து உடைந்து சிதறும் துகள்கள் இவர்களது ஸ்பேஸ் கேப்சூலையும் தாக்குகிறது. கண்ட்ரோல் ரூமில் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டு , இவ்விருவரை தவிர அனைவரும் இறக்கின்றனர்.

எதிர்பாராத ஒரு சந்தர்பத்தில் மேட் உயிர் தியாகம் செய்கிறார். அந்த புள்ளியில் இருந்து  ஒரு  One Woman Journey towards earth.

முழுக்கதையையும் சீன் பை சீன் சொன்னால் சுவாரசியம் போய்விடும் ( முழு கதையையும் டைப் அடிச்சி டிஸ்கஸ் பண்ணுறதுக்கு நாங்க சோம்பேறிங்க என்ற குறியீடு இது ).

முதலில் ஒன்றை கூறிவிடுகிறேன். நான் குறியீடுகளின் காதலன். டைரக்டருக்கே தெரியாத குறியீடுகளை தேடித்தேடி சினிமாவில் பார்ப்பவன்.
( டிஸ்கி(Disc ) யை  முதலிலே சொல்லிவிடுவது நல்லது )

அவ்வகையில்  Gravity  என்னை கவர்ந்தது. 


சில அழகியல்கள் :

 Cast Away, Apollo 13  இரண்டையும் சேர்த்து கிண்டியது போல் இருந்தாலும் சில நல்ல டைரக்டோரியல் டச் இந்த படத்தில் இருக்கிறது .

விண்வெளி :

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது.
பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது "

என்று நம்ம சித்தர்கள்  பாடல் எல்லாம் எழுதி விளையாடி இருக்கின்றனர். ஆனால் மேலை நாடுகளில் அவ்வாறு இல்லை. விண்வெளி குறித்து பேசுவது, தகவல்கள் பரப்புவது என்பது ஒரு காலத்தில் கொடுங்குற்றம். பூமியை சுற்றிதான் சூரியன் சுற்றுகிறது என்று நம்பிய காலம் முதல் , இன்று  Eric Von Daniken னின்  Ancient Aliens  thoery ( நாம் வணங்கும் கடவுள்கள் யாவரும் வேற்றுகிரகத்தில் இருந்து நம் கிரகம் வந்த விண்வெளி வீரர்கள் ), டார்வினிசதிர்க்கு சவால் விடும்  Cosmozoic Theory ( பூமியின் உயிர்கள் அனைத்தும் வேறு கிரகத்தில் தோன்றியவை ) வரை அறிவியலுக்கும் , இறை நம்பிக்கைக்கும் ஒரு போட்டா போட்டி நடந்துகொண்டே இருக்கிறது. இந்த படத்தில் ஆனால் கிறிஸ்துவத்துக்கு சாவால் விடும் ஆனால் இறைநம்பிக்கையை அழுத்தமாக பதிவு செய்யும் நுண்ணரசியல் அழகாய் இருக்கிறது.

அவ்வகையில் அவர்களுக்கு விண்வெளி என்பது ஒரு ஆர்வத்தைதூண்டும் கதைக்களம். விண்வெளி குறித்து எந்த படம் எடுத்தாலும் அதில் கிறிஸ்துவத்துக்கு எதிரான கருத்துக்கள் இருக்கின்றன என்று ஒரு கூட்டம் கிளம்பும். இறை நம்பிக்கைகள், மத கோட்பாடுகள் பொதிந்த படங்கள் வந்துகொண்டு இருந்த வேளையில் 2001 :  A Space Odyssey  ( நம்ம தலைவர் கூப்ரிக் கின் படம் ) படம் எடுத்தே ஒரு புரட்சி தான். அந்த படம் வந்த அடுத்த வருடம் தான் நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால் வைத்த அந்த யுக முக்கிய நிகழ்வு நடந்தேறியது . அந்த படம் வெளிவந்த போது அது உருவாக்கிய அதிர்வு அப்போது எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள். அந்தப் படம் விண்வெளி குறித்த படங்களுக்கு ஒரு  Benchmark  என்றால் அது மிகையில்லை. 

இந்த படம் அந்த அளவுக்கு இம்பாக்ட் தருகிறதா என்றால்  அது சரியான கேள்வி அல்ல. காரணம் நமக்கு விண்வெளி குறித்து எக்கச்சக்க தகவல்கள் இப்போது தெரியும்.  Escape Velocity  குறித்து கேட்டால் ஒரு  11 th std மாணவன் கூட விளக்கம் தருவான். 

ஆனால் தனியே விண்வெளியில் அகப்பட்டுக்கொண்டால் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை இந்த படம் முகத்தில் அறைவது போல் கூறுகிறது. ரெண்டே ரெண்டு  Protagonist. அதனால் நமது கவனம் சிதறாமல், குழப்பாமல் விண்வெளியில் தனியே மாட்டிக்கொண்ட வாதையை சிறப்பாக கூறுவதில் இந்த படம் தனித்து நிற்கிறது . 


படத்தின் இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க ஒரு  Spiritual touch கொடுத்திருக்கிறார் இயக்குனர் .

படம் முழுக்க மறுபிறப்பு தத்துவங்கள் விரவி கிடக்கின்றன .


சாண்ட்ரா விண்கலத்தின் உள்ளே மறுபடியும் பிரவேசிக்கும் சீனில் கருவில் இருக்கும் குழந்தை போல் இருக்கிறார் என்று இயக்குனரே கூறினார் ஒரு பேட்டியில் . (இப்போ எல்லாம் இயக்குனர்களே குறியீடு எது என்று சொல்லிவிடும் காலம் போல ).

அதற்கு முன் கொஞ்சம் கவனியுங்கள் . அந்த  space Capsule  என்பது ஒரு சினை முட்டையை போல் இருக்கும். அதில் உள்ளே வரும் ரயன் baby with Umblical Cord போன்று இயக்குனர் காட்டியது ஓகே தான். ஆனால் பாருங்கள் சாண்ட்ரா மட்டும் தான் உள்ளே வருவார். அதுவும் அந்த கேப்சூளின் கதவை திறக்க கஷ்டப்பட்டு உள்ளே வருவார். மேட் கெளலாஸ்க்கி உள்ளே வராமல் உயிர் தியாகம் செய்வார். ஏனைய அனைவரும் அங்கே நடந்த வெடிப்பு காரணமாக இறப்பார்கள். 

capsule  தேடி அங்கும் இங்கும் அலைவார்கள் அவ்விருவரும் .
அங்கே அனைவரையும் Sperms ஆக உருவகம் செய்து , ஒரே ஒரு sperm  மட்டும் கருத்தரிக்கும் (ரயான் மட்டும் உள்ளே வருவது ), மற்ற அனைத்து Sperm களும் (மற்ற விண்வெளி வீர்கள் )  இறப்பது என்று ஒரு  Fertilization Process  சை அழகாக உருவகித்து இருக்கிறார் இயக்குனர். 

ஒரு  Molecular Biologist  ஆக பார்த்தபோது என்னை மிகவும் ரசிக்க செய்தது. 

படத்தில் ரயானுக்கு வேற்றுகிரக வாசி குறித்து பயம், சந்தேகம் வரவைக்கும் ஒரு குட்டி இடம் இருக்கிறது. ஒரு சீனில்  crew member  ஒருவரின் பொம்மை  பறந்து வரும் அவரிடம். அது என்ன பொம்மை என்றால்  "Marvin, The Martian " என்ற Looney  Tunes  கதாபாத்திரம். செவ்வாய்கிரகவாசி பொம்மை அவரை முறைத்து பார்த்துக்கொண்டே மிதந்து போகும் சீன் .கிளாசிக் !!

மற்றுமொரு சீனில் விண்வெளி வீரர்களுக்கும்  அவர்களுக்கு கட்டளை வழங்கும் கண்ட்ரோல் ரூமுக்கும் இடையே இருக்கும் தொடர்பு விட்டுப்போகிறது ( எவனோ இன்கமிங் ஆம் !!). 

நாம் பேசுவது அவர்களுக்கு கேட்காது  என்று ரயான் கூறும் நேரத்தில் , மேட் சொல்வார் " அவர்கள் பேசுவது நமக்கு கேட்காவிடினும் , நாம் பேசுவது அவர்களுக்கு கேட்கும் " என்று கூறுவார் .

பதிலே சொல்லாத கடவுளுக்கு நாம் செய்யும் பிராத்தனை எந்த நம்பிக்கையில் என்பதை அழகாக கூறியிருப்பார் இயக்குனர் .

தன மகள் கீழே விழுந்து ஒரு விபத்தில் இறந்ததால் , மனதளவில் பிணமாய் வாழும் ரயான்  அமைதியை விரும்பி விண்வெளி வருகிறார் . ஆனால் அதே அமைதி , ஆள் அரவமற்ற ஒரு நிசப்தம் அவரை அங்கே கொல்கிறது . விரும்பிய ஒரு விஷயமே அவருக்கு பிடிக்காமல் போகிறது.
தன மகள் கீழே விழுந்து இறக்க காரணமாய் இருந்த புவியீர்ப்பு விசை அவருக்கு வெறுப்பு தருகிறது. ஆனால் பின்னர் அந்த விசை தேடி அவரே அலைவது ஒரு அழகிய முரண். 

ஒரு இக்கட்டான தருணத்தில் , மேட் உயிர் தியாகம் செய்கிறார்.  தன்னையும் ரயானையும் இணைக்கும் கயிரை வெட்டிவிட்டு அவர் ரயானை காப்பாற்றுகிறார். அப்போது அவர் சொல்லும் வார்த்தை "  You have learn to let go. " நக்கல் நையாண்டியாய் திரியும் அந்த கதா பாத்திரம் அழகாக " ப்ரீயா வுடு மாமே " என்ற ஜென் தத்துவத்தை அங்கே கூறுவது நல்ல காட்சி .

தானைத்தலைவன்  Christopher Nolan னின் படைப்பான  The Dark Knight Rises படத்தில் ஒரு Prison  escape சீன் . 

I m nto gonna Die here என்று ஹீரோ கூறுவார்.

Here, there What's the difference ?  என்று ஒரு பாத்திரம் கேக்கும் .

ஆனால் வெளியேற வேண்டும் என்ற முனைப்போடு ஹீரோ வெளியே வருவார். பொதுப்புத்தியில் இருந்து தனித்து , உலகியலை தாண்டி வெளியே வரும் குறியீடு அழகாய் காட்டி இருப்பார்.அதே போல் இந்த படத்திலும் ஒரு முனைப்போடு பூமியை நோக்கி நகரும் பாத்திரப்படைப்பை இயக்குனர் வைத்திருக்கிறார். ஆனால் அதைவிட சிறப்பு என்னவென்றால் எங்கே ரயான் போராடுவது தன் மனதோடு. தன்னை  Discourage  செய்யும் மனதோடு போராடி வெல்லும் காட்சிகள் இருப்பது. தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒரு காட்சியில் ஒரு  Euphoria experience, near death experience  ஏற்பட்டு தடுமாறும் நேரத்தில் மீண்டும் மேட் வருகிறார்..ஆனால் அதற்கு பிறகு இருக்கும் டுவிஸ்ட் திரையில் பாருங்கள். இதுதானே நடக்கும் ன்னு எதிர்பார்த்த நேரத்தில்ஒரு "அட "  Moment  அங்கே. (ஒரு  wrong number  ஆசாமியுடன் உரையாடும் இடத்தை கவனியுங்கள் )

இப்படி இன்னும் இன்னும் நிறைய காட்சிகள் அருமையாய் இருக்கிறது. திரையில் பாருங்கள் 

க்ளைமாக்ஸ் காட்சி அற்புதம் . அருமையான குறியீடு. 

கூட்டை( zygote டில் இருந்து வரும் குழந்தை போல் ) உடைத்து ராயன் முதலில் நீந்தி, ஊரி , நாலு காலில் தவழ்ந்து, குரங்கை போல் தடுமாறி அரைகுறையாய் எழுந்து நின்று, பின் மனிதனைப்போல் நேராய் நிமிர்ந்து நிற்பது என்று பரிணாம வளர்ச்சியின்  Dogma வை அருமையாய் கட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர். (அதற்கு முன் அந்த தவளை நீந்தி தப்பிக்கும் கட்சியை கவனியுங்கள் ).

பெரிய ஸ்க்ரீனில் பாருங்கள். 90 நிமிடங்களுக்கு ஒரு agoraphobia  என்ற திறந்த வெளி குறித்த பயம் , Claustrophobia என்ற சிறிய இடத்தினுள் மாட்டி தவிக்கும் பயத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் .

ஆஸ்கார் வாங்காது , ஆனால்  Visual Effects க்கு நாமினேட் செய்யப்படும் வாய்ப்பு அதிகம் . இயக்குனர் Alfonso Cuarón ஏற்கனவே Harry Potter and the Prisoner of Azkaban  என்ற படத்தில்  Time travelling  என்ற கான்செப்ட்டை அழகாக வடிவமைத்திருப்பார். அதே போல் இந்த படத்திலும் விளையாடி இருக்கிறார். 
அவர் இயக்கிய  Y tu Mama Tambien என்ற செமி  Softcore படம், என் சிறுவயது  favorite. இதில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.  ஒரு பக்கம் கியெர்மொ டெல் டோரோ , மறுபக்கம் Alfonso Cuarón  பார்க்கையில்  " சபாஷ் , சரியான போட்டி " என்று சொல்லதூண்டுகிறது. 

நிச்சயம் நல்ல படம் .

Tidbits :

1. Sandra  Bullock  சுருண்டு குழந்தை போல் இருக்கும் சீனை இங்கே ஆங்கில ஊடகங்கள் ஸ்லாகித்து எழுதுகின்றன. மறுபிறப்பை அழகாய் காட்டும் சீன் என்று. ஆனால் இதற்க்கு முன்னரே  Terminator 2 : Judgement Day  படத்தில் அர்னால்ட் தோன்றும் சீன் , அவர் ஆடை ஏதும் இன்றி குழந்தை போல் பிறப்பு எடுத்து வரும் ஒரு புதிய ஜீவா ராசியாக காட்டியிருப்பார் ஜேம்ஸ் கமேரூன். ( தல டா !!). எனவே இது ஒன்னும் பெரிய சீனாய் தெரியவில்லை . 

2. சாண்ட்ரா நாலுகாலில் நடக்கும் பரிணாம வளர்ச்சி குறியீடு சீன் போல் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ந்தால் , நம்ம தமிழ் சினிமாவிலேயே இருக்கிறது . 

நண்பனின் தங்கை உடை மாற்றும்  காட்சியில் பிரசன்னா ஒரு Peeping tom ஆக மாறி போய் லுக் விடுவார். ஆனால் நாலு காலில் ஊர்ந்து சென்று போய் குனிந்து அப்ரோச் செய்வார். 

இரண்டு கால் மனிதன் --> நான்கு கால் மிருகம் --> ஒழுங்கற்ற காமம் 

இந்த  Transition காட்சியமைப்பை அழகான குறியீடாய் வைத்திருப்பார் மிஷ்க்கின் .

3. Learn to Let go  இந்த நல்ல " தாவோ " தத்துவத்தை இந்த  படம் மறைமுகமாய் கூறுகிறது . 

அதே ஜானரில் காட்சி அமைப்பு உள்ள படங்கள் வேறு சில உள .
 சில நல்ல குறியீடுகள் இது போல் உள்ள படம் The Matrix. தாவோ சிம்பலான கருப்பு வெள்ளையை , அந்த பாசிடிவ் நெகடிவ் பாலன்ஸ் காட்ட  Neo, morpheus  போடும் சண்டை காட்சி ஒன்றில் அவர்களது உடை கலராக  காட்டி இருப்பார்கள் .  Kung Fu Panda  படத்தில் இதே போல் பாண்டாவை "கருப்பு வெள்ளையில் " காட்டி தாவோ குறியீடை காட்டி இருப்பார்கள் . 

4. மனதோடு போடும் போராட்டதை ஜென் குறியீடுகளுடன் கூறும் மற்றொரு படம்  "The Peaceful  Warrior ".  
இன்னும் அழுத்தமான படம் வேண்டுமென்றால் "  Revolver "  என்ற படம் . தலைவன்  Guy Ritchie  ( தல டா !! )இயக்கிய படம். 

அதைவிட குறியீடு நிறைய தளும்பும் படம் என்றால் "  The Fight Club "  என்று டேவிட் பின்சர் இயக்கிய படம் பாருங்கள் .

(ஆனால் தலைவன் குப்ரிக் இயக்கிய  The Shining   படத்துடன் ஒப்பிட்டால் இதெல்லாம் தூசு...த்தா , நான் எடுக்குறேன் டா குறியீடு கிளாஸ் என்று தலைவன் குப்ரிக் அடித்து கூறும் படம் )

5. இது ஒரு குறியீடு இல்லை. ஆனால் ஒரு நல்ல  Parable . " நெருப்புக்கு எதுடா , சுத்தம் , அசுத்தம் ? " என்று ஆரியா நெருப்பில் சிகரெட்டு பத்த வைக்கும் காட்சி.. அட !!  Moment.   அதே போல் வேறு குறியீடு காட்சியோ ,  parable காட்சியோ வேறு ஏதேனும் தமிழ் படத்தில் இருக்கிறதா ?...தெரிந்தால் கூறுங்கள். வி வாண்ட் மோர் மை டியர் தமிழ் இயக்குனர்ஸ்...

6. ரஷ்யர்களின் ஏவுகணை வெடிப்பால் வரும் பாதிப்பு. பின்னர் அமெரிக்க குழு , சீன ஸ்பேஸ் ஷிப் உதவியுடன் ஆபத்தை எதிர்கொள்வது மாதிரி காட்சியமைப்பு ... any realation to US-Chinese cold war pacification ?? ( கொளுத்தி விடுவோம் )

7. Shenzou என்ற கேப்சூளின் உள்ளே சென்று  recover  ஆகும் காட்சியமைப்பு . Shenzhou   என்றால் டிவைன் என்று இணையம் கூறுகிறது . Saved by divine intervention  என்ற கோட்பாடை காட்ட அந்த பெயரை பயன்படுத்தியது சிறப்பு.  Dragonball Z   தொடரை பார்த்திருந்தால் உயிர்பிக்கும், காப்பாற்றும்  உணவிற்கு  shenzou Bean  என்ற பதம் வரும் .

படம் பாருங்களேன்...உங்களுக்கும் பிடிக்கும் ...அந்த தனிமையின் வாதையை அனுபவித்துவிட்டு வாருங்கள்...











Tuesday, September 24, 2013

காதலிக்காதவன்

அவனுக்கு அவள் சலித்துப்போனாள் ..
அவளுக்கு அவன் புளித்துப்போனான் ..

"புரிதலுடன் நண்பர்களாகவே பிரிகிறோம் " என்று
நண்பர்களையும் குழப்பியே போய் தொலைந்தார்கள் ...

அவன் தந்த டெடி பியரும்
அவள் தந்த தேவதை ஓவியமும்
இன்னும் காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றன
அவர்களை சேர்த்து வைத்த 
அந்த நண்பனது வீட்டில்.....

தூக்கி எரிய மனமில்லாமல்
ஏனோ அவற்றை வைத்திருக்கிறான்
இதுவரை காதலில் வீழ்ந்திடாத
அந்த பாவி நண்பன் ...
 

இவளவு தான் பாஸ் Facebook.



 = இனிமேல் பேசுறதுக்கு என்கிட்டே எதுவும் இல்ல 

****** = கெட்ட வார்த்தை 

...!!! = கவிதை 

typing ( சுமார் 40 நிமிஷமா) = நீயா ஓடிடு..நானா போ னு சொல்ல மாட்டேன்.. ரிப்ளை பண்ணவே மாட்டேன் 

சே குவேரா, பிரபாகரன் ப்ரொபைல் படம் = போராளி (யார் சொன்ன ?..அவங்களே சொன்னங்க )

நஸ்ரியா ப்ரொபைல் படம் = பொம்பள பேருல சுத்துற ஆம்பளையோட Fake ID

ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே !!, என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் = அற
ச்சீற்றம் 

5 செகண்டு குள்ள இத லைக் பண்ணு = பிச்சைக்காரன்

எனக்கு புடிச்ச சினிமா - Sachin ( A post modern, neo-noir classic of the exotic Gothic,post apocalyptic film )



ரொம்ப நாள் கழிச்சி நம்ம டாக்டர் விஜய் நடித்த சச்சின் படம் பார்த்தேன்... சங்கவியுடன் நடிப்பதை நிறுத்தியதன் பின் வெகுசில படங்களில் மட்டுமே விஜய் சிறப்பாய் நடித்திருப்பார்.. துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை , பிரியமானவளே, வசீகரா போன்ற விஜய் படங்களுக்கு நான் ரசிகன் ( இங்கே ரசிகன் என்பது முன்னே கூறிய சங்கவியுடன் விஜய் நடித்த படம் அல்ல... FAN ).

அதன்பின் விக்கோ டர்மெரிக் முகம் முழுவதும் அப்பி திருபாச்சி படத்தில் ஒரு அவதாரமாய் விஜய் பரிணமிக்க தொடங்கினார்.....

சரி ரொம்ப பில்ட் அப் எழவு எல்லாம் வேணாம்.. நேரா மேட்டருக்கு வருவோம்.

சச்சின் .. என்னனே தெரியல...எனக்கு பிடிச்ச படம். நல்ல டிரெஸ்ஸிங் சென்ஸ் படத்தில் பார்க்கலாம்..

படத்தில் என்னை கவர்ந்த அம்சங்கள் :

1. கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ரகுவரன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காராய் வருகிறார். எவளவு "மிகப்பெரிய " என்றால் கால் முட்டி வரை நீளமான ஒரு கோட் அணிந்து வருகிறார். மார்க் அண்டனி ரோலில் நடித்த போது போட்ட கோட்டை அணிந்து வருவது அழகு. அதிலும் அந்த முட்டிக்கு கீழே கோட் இருப்பதை பார்த்தால் சட்டை மட்டும் அணிந்து நிற்கும் பாலு மகேந்திராவின் கதாநாயகிகள் நியாபகம் வருவது உறுதி.

2.சாதாரணமாய் ஆஸ்பித்திரியில் இருக்கும் ஒரு குழந்தைக்கு, கதற கதற ஒரு கதையை சொல்லி நல்லா இருந்த குழந்தையை ........ ( சரி வேணாம் விட்ருவோம்....அப்புறம் மனிதாபிமானமே இல்லையா ? ன்னு இன்பாக்ஸ் ல அர்ச்சனை வரும் ).

அப்போது சீரியசாய் இருக்கும் குழந்தையை பற்றிகூட கவலையே படாமல் பக்கத்தில் இருப்பவரிடம் கதறி கதறி ஹீரோ புகழ் பாடும் விஜையின் நடிப்பு method acting க்கு உதாரணம்... அட !! நம்ம விஜய் தம்பியா இப்படி என்று ஷாக் ஆகும் நண்பர்கள் கவனத்திற்கு , இரண்டாவதாய் இங்கே கூறிய விஜய் நம்ம தலைவாசல் விஜய் ( தலைவா விஜய் அல்ல ). ஆம் அவர்தான் குழந்தையின் அப்பா.

3. இதுதான் மிக முக்கியமாய் என்னை கவர்ந்த விஷயம். நான் சிறுவயதில் சிந்தாதிரிபேட்டையில் இருந்தபோது அடிக்கடி ஒரு சாகிப் பாய் வந்து சாம்பிராணி போட்டுவிட்டு செல்வார்.. ஒரே புகை மையமாய் இருக்கும்..நாங்க புகையில் அப்படி என்ஜாய் பண்ணி வெளையாடுவோம் . அப்புறம் மதுரை பக்கம் வந்துவிட்ட பின் தத்தனேரி சுடுகாட்டில் தான் அவளவு புகையை பார்த்திருக்கிறேன்.
அதே அளவு புகையை படம் முழுக்க வருமாறு அள்ளி தெளித்திருக்கிறார் இயக்குனர்.. MIST ஆம்.... எந்த அளவுக்கு mist வருதுன்னா coimbatore airport ல இருக்கிற பயணிகளின் பெட்டியில் இருந்தும் புகை வரும் அளவு மிஸ்ட்.shooting set ல இட்லி பரிமாறும் சமயத்தில் இட்லி குண்டானில் இருந்து இதை விட கம்மி புகை தான் வந்தது என்றும் செய்தி....
42 இன்ச் tv ல படம் பாத்தேன். எழுந்து போய் டிவி பின்னாடி ஒருவாட்டி பாத்துட்டு வந்தேன். சாகிப் பாய் மறைஞ்சி நின்னுகிட்டு சாம்ப்ராணி போடுறாரா ன்னு....அவ்ளோ mist படம் பூரா.....

(தமிழ் நாட்டை தனி நாடாய் மாற்றுவோம் என்று கூறும் "சே குவேரா பனியன் பாயிஸ் "இதை கவனிக்கவும்.. 2099 யில் நீங்கள் ஆட்சி அமைத்தால் இந்தியாவை இந்த சுவிசர்லாந்து effect வரும் அளவுக்கு முன்னேற்றவும்... எங்கள் north madras புளியந்தோப்பு ஏரியாவில் இந்த மாதிரி mist வந்தால் செம்ம கிளாமரா இருக்கும் )

சச்சின் படத்தை இயக்கியவர் ஜான் மகேந்திரன்...முள்ளும் மலரும் எடுத்த அவரது தந்தை மகேந்திரனை இந்த ஒரே படத்தின் மூலம் overtake செய்திருப்பார்...

சச்சின் ஒரு சூப்பர் Neo-Noir படம் .. .

எல்லா சந்தோஷமும் Spam Boxகே !!

1. You have won 4398753948750349570349 $ as prize money. Please contact us with your account number immediately.

2. Free Mobile top up for 300 Rs. Zoodo.com..Hurry up

3. You have won an Iphone lucky draw. Reply to avail your new Iphone 4S

4. Hey, I am Neha . 22 Years F from Bangalore. I am interested to meet you. 

5. My name is Stella Babi, I am interested in your profile and I think we can move up to the next level. message me your phone number in facebook.

6. There is an important transit of Jupiter occuring in August that is going to change your life for ever. Listen to what our Clairvoyants say about your detailed future. Exculsively free for you at Astrocenter.com

7. Umamaheshwaran you have been selected for a special discount on Samsung Galaxy Note II

8. APPLY NOW & Rebuild Your Credit With The Vanquis Visa Card - Up To 1,000 GBP Initial Limit!

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ?....
(அதை எல்லாத்தையும் ஏன் spam box இல் வைத்தாய் ???

சட்டு புட்டுன்னு ஒரு கதை-1 :



"ஐ லவ் யு டி.. நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல ..பிளீஸ் புரிஞ்சிக்கோ ....உன்ன தவிர நான் வேற எந்த பொன்னையும் லவ் பண்ணல ..உனக்காக என்னோட பழைய காதல் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டேன்...நீ இல்லனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.."

வித் லவ் 
தீபக் 

அவசரமாய் டைப் அடித்து விட்டு Ctrl + A , Ctrl +C அமுக்கி , அதை விட அவசரமாய் Ctrl + V யை பக்கத்துக்கு Chat Window வில் அமுக்கினா

சட்டு புட்டுன்னு ஒரு கதை 2 :



"என்ன எழவு சமூகம் இது ? உருப்படுமா இந்த உலகம் ?. விட்டுக்குடுக்கும் மனப்பாங்கு போய்விட்டது . நாம என்ன கற்காலத்துலயா வாழுறோம் ?.. மனுஷன மனுஷனா நம்பாத இந்த சுயநல சமூகம் நாசமாய் போகட்டும் .இந்த வெறிபிடித்த ...... "

இதுவரை இலவசமாய் கிடைத்து வந்த பக்கத்துக்கு வீட்டுக்காரனின் WiFi க்கு password போட்டு internet கிடைக்காமல் போனதால் பொருமி தீர்த்துக்கொண்டே டைப் அடித்துக்கொண்டு இருந்தார் எழுத்தாளர் "சமூகபொங்கி".

சட்டு புட்டுன்னு ஒரு கதை -3


மிக பிரபல அந்த ஹீரோவின் கால்ஷீட்டை கஷ்ட்டப்பட்டு வாங்கிருந்த அந்த டைரெக்டர் டென்ஷனாய் இருந்தார். அந்த ஒல்லிபிச்சான் ஹீரோ ஒக்கார வைத்து அந்த படத்து ஹீரோயின் மேல் தான் கொண்ட காதலை கக்கிகொண்டு இருந்தான் .

யூனிட் ஆளுங்களையும் புடிச்சி கதை சொல்லிக்கொண்டு இருந்ததால் ஒலக கடுப்பில் இருந்தார் டைரெக்டர் .

"என்னதான் நான் பெரிய ஹீரோவா இருந்தாலும் எனக்கு அவள புடிச்சிருக்கு ப்ரோ "

"வாஸ்தவம் தான் சார் , பெரிய ஹீரோ உங்களுக்கு புடிக்கிதுனா அது என்ன சும்மாவா "

"சும்மா இல்ல ப்ரோ , தெய்வீக காதல் "

"ஆமா ஆமா, அழகான பொண்ணுமேல தெய்வீக காதல் வராட்டி எப்படி ??...வாஸ்தவம் தான் சார் "

"நிலா மாதிரி அவ முகம் இருக்கே ப்ரோ.....அது " என்று ஹீரோ ஹீரோயினின் முக அழகை சொல்லிமுடிக்கும்முன் ,

"கார்ர்ரர்ர்ர்ரர் த்த்த்த்த்த்த்தூ " என்று எவனோ கத்தினான்.

"டேய் எவண்டா அவன், எவண்டா அவன் ?? " என்று யூனிட்டை பிரிச்சி மேய்ந்துகொண்டிருந்தார் ஒ.பி ஹீரோ.

"த்தா! இந்த மேக் அப் மேன் பொறம்போக்குக்கு எந்த நேரத்துல டென்ஷன் ஆவுரதுன்னு ஒரு வெவஸ்தையே இல்ல . நான் பொறுத்துக்கினு கேக்கல கம்முனு ?... ..." என்று மனதில் பொங்கிக்கொண்டு இருந்தார் டைரக்டெர் .

சட்டு புட்டுன்னு ஒரு கதை - 4



பழைய காதலியை தற்செயலாக ஷாப்பிங் மாலில் பார்த்துவிட்டு திரும்பிய தீபக் பேயடித்தது போல் உக்காந்திருந்தான்.

"ப்ரோ.பீல் பண்ணுறீங்களா ?..விடுங்க..உங்க காதலோட வொர்த் அவளுக்கு தெரியல...ப்ளீஸ் அவல விட்டு வெளிய வாங்க ப்ரோ. " என்று தோல்விகரமாய் தேற்றிக்கொண்டு இருந்தார் ஜிம் மாஸ்டர் குகன். 

அதில்ல டா.... இடுப்ப லைட்டா கிள்ளிட்டேன்னு அன்னைக்கு கோச்சிகிட்டு போனவ ...இன்னைக்கு 10 வருஷம் கழிச்சி பாத்ததும் ஒரு மாதிரி இருக்கு..பிலீவ் மீ..இட் இஸ் பெயின்புள்.. "

"இவளோ ஆழமான காதல அவ மிஸ் பண்ணிட்டா ப்ரோ "

"அதில்லடா...என் வருத்தம் எல்லாம் வேற "

" அவ புருஷன் மனோபாலா மாதிரி இருந்தான் ....அதானே ?....நல்ல பிகர்ஸ் க்கு அப்படி புருஷன் அமையுறது Evolutionary mechanism...பரிணாம வளர்ச்சி ப்ரோ... "

"அட அந்த கருமம் எல்லாம் இல்லடா...அப்போ கிள்ளுன இடுப்பு இப்போ சிலிண்டர் மாதிரி ஆகிடுச்சி ....அத நெனைக்கிறப்போ தான் என் மனசு வலிக்குது.....ப்ளீஸ் டா...உன் bluetooth ல இருந்து ரெண்டு விக்ரமன் படத்து பாட்டு அனுப்பேன்... I Need some peace bro " என்றான் தீபக்.

இன்றைய அழகுக்குறிப்பு

இன்றைய அழகுக்குறிப்பு 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
குளியல்

தங்கமீன்கள் -ஒரு நேர்மையான விமர்சனம்.

தங்கமீன்கள் -ஒரு நேர்மையான விமர்சனம்.
.
.
.
.
.
.
.
.
.
.
தனது அடுத்த படத்தில் ஆண்ட்ரியா என்னும் தேவதையை டைரெக்டர் ராம் , ஹீரோயினாக அறிவித்திருப்பதால் தங்கமீன்கள் மிக சிறந்த படம் என்பதில் சந்தேகமே இல்லை ...
நான் இன்னும் படம் பார்க்கவே இல்லை ஆனா நிச்சியமா தங்க மீன்கள் ஒரு ஆகச்சிறந்த படம்

சட்டுபுட்டுனு ஒரு கதை 5 - ஒரே ஒரு லைக்



" நான் வாழறது இனிமே வேஸ்ட் சுஜா, நான் செத்துடுறேன்..நானும் அவளும் எப்படி எல்லாம் பழகனோம் ன்னு எல்லார விட உனக்கு தான் நல்ல தெரியும்.. இப்போ அசால்ட்டா அவ என்னைய மறந்துடு ன்னு சொல்லிட்டு வேற கல்யாணம் பண்ணிகிட்டா "

" விடு தீபக். அவ போனா போறா...நான் இருக்கேன் டா உனக்கு...எந்த தப்பான முடிவும் எடுத்திராத ப்ளீஸ்."

"முடில சுஜா , அவ நினைவுகள் என்னைய ரணமா கொல்லுது...நான் போய்டறேன் "

"டேய்..தீபக்."
Deepak, U thr?
Deepak. Pls reply

தீபக்க்க்க்

" சொல்லு சுஜா "

Log Off பண்ணுறதுக்கு முன்னாடி என்னோட Profile picture க்கு Like போட்டுட்டு போறியா ?.. 99 லைக்ஸ் வந்துருச்சி......அதான்...கோச்சிக்காத டா..ஓகே வா ?

சட்டுபுட்டுனு ஒரு கதை - 7



வார்த்தை மாண்பு :

புதியதாய் தொடங்கப்பட்ட அந்த ஜனரஞ்சக பத்திரிக்கையின் Chief Editor சீறியபடி Sub editor ரூமுக்கு வந்தார்.

" யோவ். என்னய்யா எழுதிருக்க ? இப்படிதான் ஆபாசமா திரிச்சி எழுதுவியா ஒரு செய்திய ? decent டா எழுத தெரியாதா ?...என்னய்யா பத்திரிக்கைகாரன் நீ ?..உனக்கெல்லாம் பத்திரிக்கை தர்மம் தெரியுமா தெரியாதா ?? "

"சாரி சார்....நீங்க எத சொல்றீங்கன்னு தெரியல....எது சார்.? " படபடத்தார் சப் எடிட்டர் .

இதொ இது தான் யா

" 1. ஹோட்டலில் விபச்சாரம் செய்த விபச்சாரிகள் கைது.. விபசாரத்திற்கு அழைத்தபோது போலீசிடம் பிடிபட்டனர்.

2. சீரியல் சைடு ஆக்டர் தற்கொலைக்கு முயற்சி "

"சார்...அது வந்து நான் புதுசு...அது வந்து "

சரி விடு...நான் கரெக்ட் பண்ணிட்டேன்.இந்தா இந்த ப்ரூப் ல இருக்கிற மாதிரி போடு

" 1. ஹோட்டலில் 'தொழிலில்' ஈடுபட்ட 'அழகிகள் ' கைது. 'உல்லாசமாய் ' இருக்க வாலிபரை அழைத்தபோது போலீஸ் வலையில் சிக்கினர்.

2. பிரபல நடிகர் தற்கொலை முயற்சி.பரபரப்பு தகவல்கள் "

சரி சார்....தங்க யு சார்...

" ஹ்ம்ம் ஹ்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்...அப்புறம் தினம் தினம் தினத்தந்தி படிச்சி பழகனும்..ஓகே வா ?..அப்போதான் இந்த மாதிரி சரியான வார்த்தை பிரயோகம் வரும்."

லயன் பேரீச்சம் பழம் வழங்கும் நானா நீயா ??

வர வர லியோனி பட்டிமன்ற தலைப்புகள் தேவலாம் என்ற ரீதியில் போய்க்கொண்டு இருக்கிறது நீயா நானா ? தலைப்புகள்...

அடுத்து வரும் வாரங்களுக்கு சில தலைப்பு யோசனைகள்.

விஜய் படத்தில் சிறந்தது
குருவியா ?? சுராவா ??

பொங்கலுக்கு உகந்தது 
சட்னியா ?? சாம்பாரா ?

சிம்பு
நல்லவனா?? கெட்டவனா ??

வாசகர் கடிதம் அதிகம் எழுதுது
சாருவா ?? ஜெமோவா ??

அணிய சிறந்தது
Jockey ?? Poomex ??

அமர சுகமானது
western toilet or Indian style toilet?

பஜ்ஜி எண்ணை பிழிய
தினதந்தியா ?? ஆ.வி யா ??

இரும்புக்கை நார்மனா ? வேதாளரா ??

விக்ரமன் படம் ரீமேக் செய்ய சரியான ஆள்
stanley Kubrik? Speilberg ?

நீயா நானா அடுத்த host
லியோனி ?? டாக்டர் ராமதாஸ் ?

யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன..

ஜீன்ஸ் thereapy

இதுவரை சலவை என்றால் என்னவென்றே அறியாத , ஏழு கழுதை வயசான ஒரு ஜீன்சை துவக்க எடுத்தப்போது என்னைக்கோ வைத்த சில பல சில்லறை காசுகள் பாக்கெட்டில் கிடைத்தது 

இதுபோல கிடைக்கும் காசெல்லாம் பூட்டன் பம்பர் குலுக்கல் லாட்டரி போல. பாதி மாசத்திலேயே பிச்சைக்காரனாய் திரியும் எனக்கெல்லாம் இது மிகப்பெரிய காசு.

காசு எடுத்துகிட்டு "கடவுள் இருக்கிறான் கொமாரு " ன்னு சொல்லிகிட்டேன்.

அப்புறம் மெதுவா யோசிச்சா தான் தெரியுது " காசு வச்சது நான் தானே , கடவுள் இல்லையே ? " ன்னு ....

"நான் கடவுள் " ன்னு சொல்லிகிட்டேன்.

என்னது ஜீன்ஸா ??

அத அடுத்த வருஷம் துவச்சிக்கலாம் 

கில்லிடா !!!

ரொம்ப வருஷம் முன்னாடி நம்ம விஜய் நடிச்சிருந்த "கில்லி " படம் ரிலீஸ் ஆகிருந்த சமயம்... எங்க சொந்தகாரரு ஒருத்தர் அடம் பிடிச்சி என்னைய அந்த படத்துக்கு கூட்டிட்டு போனாரு...போகும்போதே நெறையா வார்னிங் குடுத்து தான் கூட்டிட்டு போனாரு ... " டேய் வாய மூடிகிட்டு வா , கிண்டல் கம்மெண்டு எதுவும் அடிக்காத ப்ளீஸ்.." ன்னு கெஞ்சி கூட்டிட்டு போனாரு... 
வாழக்கா பஜ்ஜி கேட்டேன் ..வாங்கி தர மாட்டேன்னு சொல்லிடாரு ..ஏற்கனவே புதிய கீதை ,உதயா மாதிரி படத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போய் என்னைய சாகடிச்ச கோபம் மனசுல இருந்துச்சி .
படத்துல விஜய் த்ரிஷாவ விஜய் கூட்டிட்டு எஸ்கேப் ஆகுற சீன் ல "அர்ஜுனரு வில்லு " பாட்டு வரும்..... அதுல விஜய் ஒரு எடத்துல ஜீப் டயர் தூக்கி ஏதோ செய்வாரு .. நான் அந்த சீனுக்கு விசில் அடிச்சி கைய தட்டுனேன் ....

""டே மாப்ள ....உனக்கு விஜய்னா அவளவு இஷ்டமா டா ??"" ன்னு ஆச்சரியமா கேட்டாரு...

அதெல்லாம் ஒரு வெண்ணையும் இல்ல... ரசிகன் படத்துல சங்கவி யா தூக்குறதுக்கு கஷ்டப்பட்ட தலைவரு இன்னைக்கு ஜீப்பையே தூக்குற அளவுக்கு முன்னேறி இருக்கிறது ரெம்ப சந்தோசமா இருக்குனு சத்தமா சொல்லிட்டு எழுந்து போனேன்...

அதுக்கப்புறம் விஜய் ரசிகர்கள் அவர ஏதோ "ஸ்பெஷல்" மரியாதை குடுத்து அனுபிச்சிருபாங்க போல...அதுக்கப்புறம் பேசுறதே இல்ல அவரு என்கிட்ட ..

நேத்தைக்கு facebook ல அவரு ப்ரொபைல் பாத்தேன்.. நல்ல இருக்கீங்களா மாம்ஸ் ? ன்னு பேசுனேன்...சந்தோஷமா பேசிகிட்டு இருந்தாரு ரொம்ப நேரம்.....
அப்புறமா " தலைவா " படத்துக்கு டிக்கெட் கிடச்சா சொல்லுங்க...சேர்ந்து போவோம்ன்னு சொன்னேன்....

இன்னைக்கு காலையில என்னைய ப்ளாக் பண்ணிட்டாரு....

Negative Thinking :


அது என்ன மந்திரமோ மாயமோ தெரியல எவன பாத்தாலும் positive thinking பத்தி கிளாஸ் எடுக்குறான். காலேஜ் ல ஆனா ஊனா personality development ன்னு சொல்லிக்கிட்டு Positive திங்கிங் என்ற வார்த்தைய வச்சி உயிர் எடுத்தானுங்க ( கூடவே பணத்தையும் ).

சும்மா எதாச்சும் இப்படி ஆகிட போகுதுன்னு எதிர்மறையா சொன்னா கூட நண்பர்கள் , "அபசகுனமா பேசாத," Positive வா யோசி மச்சி ன்னு சொல்றாங்க ..

ஆனா பாருங்க எனக்கு என்னவோ நெகடிவ் திங்கிங் என்ற விஷயம் சில சமயத்துல ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணுது.
நெகடிவ் எப்போவுமே நெகடிவ் இல்ல...... நெகடிவ் விஷயத்துல கூட பாசிடிவ் தேடி எடுக்கிறது தான் ரியல் positive thinking.

நல்லதே நடக்கும் ன்னு நினைக்கிறது Positive திங்கிங் இல்ல... கெட்டது நடந்தாலும் அதுல கூட நல்லவிஷயம் தேடுறது தான் Positive திங்கிங்

ஒரு சின்ன உதாரணம் :

என்னவோ பண்ணி நம்ம ஆளுங்க ஏரோப்ளேன் கண்டு பிடிச்சிட்டாங்க.. விபத்து நடக்காது நடக்காது ன்னு எல்லர போல Positive திங்கிங் ல இருந்திருந்தா அவ்ளோதான்.

ஆனா எப்படியும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கு ன்னு நெனச்ச ஒரு "நெகடிவ் திங்கிங் "புண்ணிவான் பண்ண யோசனை தான் ஏரோப்ளேன் ல parachute எடுத்துகிட்டு போக தூண்டி , இன்னைக்கு பல உயிரை காப்பாத்துது..

நெகடிவ் நல்லது 

தலைவா படம் ரிலீஸ் பிரச்சனை- ரசிகர் தற்கொலை

தலைவா படம் ரிலீஸ் பிரச்சனை- ரசிகர் தற்கொலை 

எத்தனையோ முறை பேசியாயிற்று . இருப்பினும் நம்மவர்கள் மாறியதாய் தெரியவில்லை. ஒரு சாதாரண செய்தியாய் இதை கடந்து சென்று விடுவது நமக்கு சுலபம். பெரிய புடிங்கி ரேஞ்சுக்கு எல்லாம் சொல்ல வரவில்லை . ஆனாலும் சொல்லாமல் விட்டால் வெட்கக்கேடு 

சினிமா பார்பவர்கள் மனதில் நிச்சியம் பாதிப்பை உண்டாக்குகிறது என்ற கருத்தில் எனக்கும் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. இப்படி சொன்னால் உடனே ஒரு க்ரூப் வாயில் கத்தியையும் , கீபோர்டில் கடப்பாறையை வைத்து " ரேப் சீனை , கொலை சீனை வேறு எப்படி காட்ட முடியும் ?...இது தான் உலக சினிமா, இது தான் யதார்த்த சினிமா " என்று பல வியாக்கியானங்கள் கூறுகிறது. சரி இருந்துவிட்டு போகட்டும்.. எந்த சினிமாவை இருந்தாலும் அது முழுக்க முழுக்க புனைவே என்ற எண்ணம் கொஞ்ச கொஞ்சமாய் மறக்கப்பட்டு வருகிறது என்று எண்ணத்தூண்டும் அளவிற்கு இங்கே கண்ணுக்கு தெரியாத சினிமா மோகம் வளர்க்கப்பட்டு வருகிறது.

பெரியதாய் சினிமாவில் என்ன இருக்கிறது இப்போது ?... ஒரு மயிரும் இல்லாத டிஜிட்டல் குப்பைகளாய் தான் சினிமா இருக்கிறது. பார்த்தோமா , போனோமா என்று இல்லாமல் அதை பற்றியே சுத்தி சுத்தி வருமளவிற்கு அதற்க்கு குடுக்கப்படும் முக்கியத்துவம் தான் "சினிமா என்றால் வாழ்க்கை" என்று ஒரு கேடுகெட்ட மாயையை இங்கே நிலை நிறுத்துகிறது.

இங்கே பழைய லியோனி பட்டிமன்றம் போல் " பழைய சினிமாவா ? புதிய சினிமாவா ?....எது சிறந்தது ?? " என்ற pointless விவாதத்துக்கு எல்லாம் செல்லவில்லை. ஆனால் ஒரு சினிமாவுக்காக அந்த காலத்தில் தற்கொலை செய்தவர்கள் எல்லாம் கம்மி. ரசிகர்கள் இருந்திருப்பார்கள். ஆனால் தியேட்டரை கொளுத்துவேன், பஸ்ஸை எரிப்பேன் என்று கூறும் ரசிகர்கள் இருந்ததாக தெரியவில்லை. அவளவு கோவம் படம் ரிலீஸ் ஆகாவிட்டால்....!!

This is called Addiction arising out of adulation.( அவளவு கோவம் இருந்தால் அவர்கள் தமது ஆண்குறிகளை வெட்டிகொள்ளட்டுமே !!...யாருக்கும் நஷ்டமில்லை....பஸ் எரிவதை விட மிகவும் வலி தரும் விஷயம் அது . கார்க் பால் கிரிகெட் விளையாடுபவர்கள் இந்த கருத்தை ஒத்துக்கொள்வார்கள் )

பழைய காலத்து opening song கேட்டிருந்தால் அதில் ஒரு சமூக கருத்து இருக்கும். தனிமனித மேம்பாட்டை எடுத்துக்கூறும் வகையில் இருக்கும். திராவிட சிந்தனைகள் உச்சம் பெற்றிருந்த காலக்கட்டத்தில் வெளியான சினிமாக்களில் இந்த பிரதிபலிப்பை காணலாம்.

ஆனால் என் தலைமுறை சினிமா மக்களுக்கு என்ன வழங்கி இருக்கிறது பெரியதாக ?

ஒபெநிங் சாங் ...அதில் ஹீரோவை பற்றி ஒரு சுய புராணம் ( அதிலும் " புலி உறுமுது புலி உறுமுது....." " எரிமலை மீதேறி கொடி கட்டுவான் " எமனுக்கே தெரியாமல் பயம் காட்டுவான் " ..." வாறன் வாறன் வாறன் லே....கெட்டவன் ன்னு பேரெனக்கு ) இந்த ரீதியில் தான் இருக்கிறது....

நாம் வாழ யாரவேனும்னா எப்படி வேணுமா கொல்லலாம் .....இதுவும் ஒரு அற்புத கருத்து

ஒரு சாதாரண ஹீரோவை 10000 ஆட்களை அடிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஒரு அவதாரமாய் காட்டுவது தான் இன்றைய சினிமா...( ஆனால் அந்த ஹீரோவால் அடுத்த நாள் கலையில் வரும் மல ஜலத்தை அடக்க முடியாது.....அப்புறம் என்ன மயிர் சூப்பர் ஹீரோவோ தெரியவில்லை )

இது இல்லையா....இருக்கவே இருக்கிறது காதல்.... சுதந்திரத்திற்கு பிறகு பல தியாகிகள் செத்து போய்விட்டார்கள்.....அவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் நமது ஆட்களை காதல் தியாகிகளாய் மாற்றியது நமது அன்பான சினிமா ...

80 களில் டீ. ஆர். ஹீரோக்கள் செத்து செத்து காதலை வாழவைத்தார்கள்.

அப்புறம் இதயம் முரளி, விக்ரமன் ஹீரோ வகையறாக்கள்.

அப்புறம் மனநிலை பாதிப்படைந்த தனுஷ் போன்ற காதலர்கள் .

அடுத்தவன் காதலி, அடுத்தவன் காதலனை கைப்பற்றும் காதலர்கள் ...

மனைவி , கணவன்களை மாற்றிக்கோலும் காதல்...... எப்பா எப்பா...!!! எத்தனைகாதல் !!

ஒரு பெண்ணின் /ஆணின் அன்பை அடைய 3 மணி நேர போராட்டம் நடக்கும் சினிமாவில் நம்மவர்கள் அவர்களை தொலைத்தது தான் மிச்சம்..

கேட்டால் உடனே சினிமாவின் நல்ல விஷயங்களை பட்டியலிடும் ஜீவிகள் சொல்வதை ஒன்றிரண்டு ஒத்துக்கொள்ளலாம்.. ஆனால் அந்த நல்ல விஷயங்களுக்காக யாரவது தற்கொலை செய்து கொண்டார்களா என்று ஆராய்ந்தால் யாருமே தெரியவில்லை. ...

படம் ரிலீஸ் ஆகவில்லை....தற்கொலை...

ஹீரோ ஒரு மதத்தை தாக்கி பேசிவிட்டார்...ஆர்பாட்டம்..

ஹீரோவை எதிர்த்து வில்லி கால் மேல் கால் போட்டு உக்காந்தார்.....உடனே ஸ்க்ரீன் கிழிப்பு...நாற்காலிகள் அடித்து நொறுக்கம் ...

( லதாவிடம் ரஜினி அடியே வாங்கியதில்லை என்று நம்பும் கூட்டம் இது. விஜய் வீட்டு வேலை செய்யும் நேரத்தில் கூட " ஏய் ஏய் ஏய் ஏய்.... நான் பெருக்குனா மாசு டி." என்று சங்கீதாவிடம் சவடால் விடுவார் என்று நம்பும் கூட்டம் இது... அஜித் கழிவறைக்கு கூட raymonds கோட்டு போட்டு தான் போவார். நைட்டு 12 மணிக்கும் Rayban cooling க்ளாஸ் போட்டு தான் வருவார் என்று நம்பும் கூடம் இது )

இதை தானா சாதித்தது நம் சினிமா ?

" குருணை , சாகுபடி, களர் நிலம், நன்செய், புன்செய், கேணி, இலைசுருட்டி புழு, மடை மாறுதல் , " இந்த வார்த்தைகளுக்கு என்னுடன் இருக்கும் நண்பர்களுக்கே தெரியவில்லை.

தினமும் தின்னும் நெல் வளர எதனை மாசம் ஆகும் என்று தெரியவில்லை...அவளவு ஏன் ஆய்த எழுத்து தெரியுமா என்றால் " சூர்யா படம் " என்று பதில் வருகிறது..

All entertainments and fantasy are justifiable ... But not at the expense of one's common sense .

பெண்களின் மெகா சீரியல் மோகம் குறித்து 1000 பக்கத்துக்கு எழுதலாம்.

சினிமா, சீரியல் போன்ற இன்னபிற புனைவுகளை நிஜம் என்று கொண்டாடும் , அல்லது பொய் என்று தெரிந்தும் அதிலே உழலும் ஒரு மலட்டு சமூகமாய் மாறிவருகிறோம் என்பது மட்டும் திண்ணம்.

நிஜத்தில் நடக்கும் விளையாட்டுக்கு நாளிதழில் இறுதி பக்கத்தையும், சினிமாவுக்கு முதல் பக்கத்தையும் ஒதுக்கியது தான் நாம் நிஜத்திற்கு குடுக்கும் மதிப்பு....சொல்லவே எட்கமாய் இருக்கிறது.

மோகம் மோகம்...சினிமா மோகம்...!! இவளவு ஏன்....சினிமா தற்கொலைகளை சாடி எழுதும் பாதி பேருக்கு "விதர்பா தற்கொலைகள் " தெரியுமா என்றால் இல்லை.. சாடி எழுதுவதற்கும் கூட சினிமாவை தவிர்த்து வெளியவே வர இயலாத சூழலில் நம்மை நாமே தள்ளிக்கொண்டோம் என்றால் அது மிகை இல்லை.

சோறு என்பதை சாதம் /white ரைஸ் என்றும், தின்பது என்பதை " சாப்பிடு " என்றும் கூறுவதை நாகரீக வளர்ச்சி என்று நாம் எண்ணினால் , நமது சமூகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது என்று சிந்திக்கும் சூழலில் இருக்கிறோம் ...

விவசாயம் மறந்த, infalation என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத, GDP என்றால் என்னவென்று அறியாத , Annual, biennial, perennial என்றால் என்னவென்று அறியாத, ஒரு கேடுகெட்ட கூட்டமாய் நாமே மாரிவருகிரோமோ என்று எண்ண வைக்கின்றன இந்த தற்கொலைகள்.

இவ்வகை தற்கொலைகள் ஒரு தனிமனித மரணம் அல்ல.. Its a death of common sense and sensibility of our society.


சினிமாவை தாண்டி மக்களை சிந்திக்க வைக்கும் விஷயங்களை முடிந்தவரை மக்களிடம் கொண்ட சேர தயாராய் இருங்கள் .

மீண்டும் பழைய சுயமரியாதை கொள்கைகளை கையிலெடுக்கும் நேரம் இது.

கழிவறை சமதர்மம்

Norway பயணம் நல்லமுறையில் முடித்து திரும்பி வந்தாச்சு. எக்கச்சக்க ஊர்கள் ..அடுத்து ஒருவாரம் நண்பர்கள் கழுவி கழுவி ஊற்றும் அளவிற்கு போட்டோக்கள். எந்த வித சண்டை சச்சரவும் இல்லாமல் நானும் நிம்மதியாய் இருந்தேன். நான் இல்லாமல் facebook க்கும் நிம்மதியாய் தான் இருந்திருக்கும்...

அதை பற்றி எல்லாம் பிறகு பேசலாம். அதற்க்கு முன் ஒரு "முக்கிய " விஷயம்.

நார்வே போன நேரம் மழைக்காலம் ஆதலால் எக்கச்சக்கமாய் நனைந்தேன். விஷயம் அதுவல்ல.."உச்சா " போகும் விஷயதில் நம்ம ஊர் போல வெளி நாடுகளில் சுதந்திரம் இல்லை. அதுவும் சுதந்திர தினம் அன்று அந்த சுதந்திரத்தையும் பறி குடுத்து toilet தேடி அலைந்தது மிகவும் கஷ்டமாய் இருந்தது.

சுகாதாரம் நல்ல விஷயம் தான் என்றாலும் அவசரத்திற்கு toilet ஓடி அலைபவனுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் அளவிற்கு நீண்டதாய் இருக்கும் என்பது திண்ணம்.

எத்தனையோ முறை சென்னை டூ மதுரை SETC பஸ்ஸில் செல்கையில் , கூறுகெட்ட விக்கிவாண்டி மோட்டல் அல்லது கேவலமான தொழுதூர் மோட்டல் இரண்டில் ஏதோ ஒன்றில் தான் நிறுத்துவான். . ரீமிக்ஸ் பாடல்கள் காதை பதம் பார்க்கும் நேரத்தில் சாவகாசமாய் இறங்கி , காலாற நடந்து "உச்சா " போய்விட்டு வருவேன். அந்த நேரத்தில் சரியான கழிவறை இல்லாதலால் பெண்கள் இறங்காமல் ஒருவித கஷ்டத்துடன் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

அங்கு மட்டுமல்ல, ஏனைய இடங்களில் ஆண்களுக்கு இந்த விஷயத்தில் இருக்கும் ஒருவித Biological Advantage பெண்களுக்கு இல்லை. நினைத்த மாத்திரத்தில் ஏதோ ஒரு சுவரையோ, transformer ரையோ தேர்தெடுத்து நீரால் A, B, C ,D என்று எழுதி விளையாடும் வசதி ஆண்களுக்கு இருக்கிறது.

ஆனால் ஒழுங்கான கழிவறை வசதிகள் பெண்களுக்கு என்று தனியாக இல்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் பெண்கள் ஏராளம். எனக்கு வேண்டிய சில தோழிகள் இரவு பயணத்தின் போது நீரே அருந்தாமல் எல்லாம் சென்று பழகி பின்னாளில் கிட்னி ப்ராப்ளம் வந்து அவதிப்பட்டுள்ளனர். அதிலும் 2 தோசை, 2 பரோட்டா எல்லாம் சாபிட்டும் தண்ணீரே குடிக்காமல் இருந்தால் என்ன ஆகும் என்று நினைக்கும்போதே விக்கல் வருகிறது.

இது எல்லாம் எனக்கு முன்பே தெரியாமல் இல்லை. ஆனால் வெறும் காதளவில் கேட்டு உள்வாங்கிகொண்டதோடு சரி. 4 நாளைக்கு எங்காவது ஒரு Toilet கிடைக்காதா ? என் பாரத்தை இரக்க எல்லாம் வல்ல அந்த ஆண்டவன் உதவி செய்ய மாட்டானா என்று ஏங்கி அலைந்த நேரம் அதிகம். ஒரு நாலு நாள் நான் ஒரு சராசரி தமிழ் நாட்டு பெண் படும் அவதி என்பது எப்படி இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்தேன்.

ஆண்களிடம் கோருவது கோருவது சில விஷயங்கள் தான்.

1. பேருந்தில் நீங்கள் பயணம் செய்தால் , கூச்சமே படமால் கண்டக்டரிடம் "உச்சா " போகணும் வண்டியை நிறுத்தவும் என்று உரிமையுடம் கூறுங்கள். உங்களுக்கு பயன் இல்லாவிடிலும் கூடவே பயணம் செய்யும் Sugar Patients அல்லது கேட்க கூச்சப்படும் பெண்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

2. ஊரான் வீட்டு கழிவறை, பொது கழிப்பிடம் என்று எதுவாய் இருந்தாலும் சுத்தமாய் வைத்துக்கொள்ளுங்கள் . சுத்தமில்லாத கழிவறைக்கு உங்கள் சகோதரியோ அல்லாதோ என் அன்னையோ நிச்சியம் போக மாட்டார்.

3. கழிவறையில் சிகரெட் பிடிக்கும் , குவாட்டர் அடிக்கும் நாய்களை பார்த்தல் பாரபட்சமே பார்க்காமல் செவுளில் ரெண்டு அப்பு அப்புங்கள் ...

4. பபுள் கம் துப்புவதற்கு கழிவறைகள் ஏற்ற இடமல்ல.

5. ஊதுபத்தி விற்கும், சோப்பு விற்கும் பெண்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு உங்கள் கழிவறையை உபயோகபடுத்த initiate செய்யுங்கள். ( பல நேரங்களில் காபி கூட குடிக்காமல் கழிவறைக்காக மட்டுமே கூட நாம் ஓட்டலுக்கு சென்றிருப்போம். உங்கள் இடத்தில வைத்து அவர்களை யோசியிங்கள் )

5. பெண்களுக்காக போராடுவதாய் சொல்லி"கொல்பவர்கள் " முதலில் இந்த கழிவறை விஷயத்தை அணுகினால் நல்லது. தண்ணீர் அருந்தாமல் பயணம் செய்யும் விஷயம் எவ்வளவு ஆபத்தானது என்று குழந்தைகளுக்கு கூறுங்கள்.

இறுதியாக ஒன்று...முக்கியமாய் பெண்களுக்கு :

நம் சமூகத்தில் மூன்றாம் பாலினரும் இருக்கின்றனர். .அச்சால்டாக நம்மால் அவர்களை " ஒம்போது , அலி " என்று பகடி செய்துவிட்டு சென்றுவிட முடிகிறது. ஆனால் அவர்கள் ஆண் கழிவறை, பெண் கழிவறை என்று எங்கு அங்கே நிலவும் ஒருவித காழ்ப்புணர்ச்சி மிகவும் வலி மிகுந்தது. பெரும்பாலும் அவர்கள் எதிர்மறையாய் நடந்து கொள்கிறார்கள், தொல்லை தருகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் ஆணி வேர் இந்த toilet politicsசும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று என் எண்ணம். எனவே மூன்றாம் பாலினருக்கும் நீங்கள் பயன் படுத்தும் கழிவறையில் சம உரிமை, சம தர்மம் அளியுங்கள்.

கற்பழித்து கொல்லப்பட்ட டெல்லி பெண், ஈழத்து இசைபிரியாவிர்க்கு குரல் குடுத்தால் தான் நீங்கள் போராளி என்று அர்த்தமல்ல.. பெண்களுக்கு , மூன்றாம் பாலினருக்கும் கழிவறையில் ஒரு முகசுளிப்பு ஏதுமின்றி நீங்கள் அனுமதிக்கும் அந்த நல்ல உள்ளப்பாங்கு 1000 போராளிகளை விட வலிமையானது.

சமூக முன்னேற்றம் கழிவறை சுத்தத்தில் இருந்து தான் தொடங்குகிறது.

சமதர்மம் , அதை ஆண் , பெண், மூன்றாம் பாலினர் என்று எந்த பாரபட்சமும் பார்க்காமல் அன்போடு அனுமதிப்பதில் தான் தொடங்குகிறது.

சென்னை எக்ஸ்ப்ரெஸ்சும் சேட்டு தமிழும்

சென்னை எக்ஸ்பிரஸ் படம் பார்த்திட்டு " ஏன்டா தமிழன் னா அவ்ளோ இளக்காரமா ??. எல்லா தமிழனும் விபூதியும் குங்குமமும் வச்சிக்கிட்டு , ஜடா முடி வளர்த்துகிட்டா டா தெரியிரானுங்க ? "ன்னு பொங்கி எழலாம்ன்னு பார்த்தேன்...

ஆனா மனசாட்சி ஒரு சேட்டு மனசாட்சியா ஒரு காண நேரம் மாறி எதிர் கேள்வி கேக்குது .

கிட்டத்தட்ட எல்லா படத்துலயும் சேட்டு எல்லாரையும் நாம ஒரு காமெடி பீசா தான் காட்டுறோம். சேட்டுனாலே பாணி பூரி, பாண் மசாலா, அடகு கடை, நம்பள் நிம்பல் ன்னு பேசுற கொச்சை தமிழ் பேச்சு அப்படின்னு ஒரு கேளிக்கை பொருளா தான் காமிசிருக்கோம் .

சேட்டுங்கள மட்டுமா ?

ஆந்திரா அழகிகள் ன்னு விபச்சாரத்தை காட்டுறது ( "நான் காக்கிநாடா கட்ட " பாடல்- சிதனை செய் படம், தொத்தாபுறம் பாடல் முழுக்க தெலுகு பாடலாக வரலாறு படத்தில் )

கேரளா பொண்ணுங்க, மலையாள படம் ன்னு பிட்டு படத்துக்கு கேரளாவா யுஸ் பண்ணுறது , ( தாராளமா மனசிருந்தா கேரளான்னு தெரிஞ்சிக்கோ - ரன் படத்தில், அப்புறம் ஷக்கீலா சேச்சி வகையறா காம நெடி காமடிகள் )

நார்த் இந்தியன் பொண்ணு ஈசியா மடிஞ்சிடும் , நார்த் இந்தியன் ஆம்பளைங்க எல்லாம் ஆம்பள மாதிரி இருக்க மாட்டங்க இப்படி சொல்லுறது ( 7 G ரெயின்போ காலனி முதல் இப்போதைய சொன்ன புரியாது சேட்டு பொண்ணுங்க காமெடி வரை )

தெலுகு ஆட்கள கொலுடி ன்னு சொல்லுறது , ( பஞ்சதந்திரம் )

இவளவு ஏன் ,

நாம் தமிழ் நாட்டு ஐய்யர் வீட்டு மாமிகளை கொச்சையா காட்டுறது ,(பவுனு பவுனு தான் படம் ஐஸ்ஸ்க்ரூட் அய்யர் முதல் சிலம்பாட்டம் படம் , யாரடி நீ மோகினி படம் வரை )

நரிக்குறவர்களை காமெடி பீசா காட்டுறது, ( பல கவுண்டமணி வடிவேலு காமெடிகள் )

இப்படி ஒவ்வொரு ஊரு ஆட்கள், ஒவ்வொரு பிரிவினரையும் வச்சி ரொம்ப வருஷம் வகை வகையா காமெடி பண்ணிட்டு இன்னைக்கு அதையே மாதிரி வட நாட்டு ஆட்கள் பண்ணுறத திட்டுறது சரியா ன்னு என் மனசாட்சி என்னையவே கேள்வி கேக்குது.

அவனுங்க நம்மள அப்படி காட்டுறது தப்பு தான். ஆனா அதே தப்ப தான் நாம பல வருஷமா பண்ணிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல முதல்ல துப்பிகிட்டு அப்புறம் அவனுங்கள துப்புடான்னு இந்த பாழா போன மனசாட்சி சொல்லுது .

நம்ம ஆட்கள முதல்ல திட்டிகிட்டு அப்புறம் அவனுங்க மேல பாய்வோம்.

இல்லாட்டி நம்ம ஆட்கள் பண்ணது வெறும் காமெடி ன்னு நெனச்சிகிட்ட மாதிரி அதையும் காமெடின்னு நெனச்சிகிட்டு போய்டுவோம்

"பாண் மசாலா = சேட்டு "ன்னு டெம்ப்ளேட்ட இருக்கிறவரை

"விபுதி ,சடாமுடி = தமிழன் "

என்ற டெம்ப்ளேட்ட திட்டுற அருகதை நமக்கு இல்லை.

ஒரு சேஞ்சுக்கு கமல் டையலாக்க உல்ட்டா அடிப்போம் .

"முதல்ல நாம விட்ருவோம் , அப்புறம் அவனுங்கள விட சொல்லுவோம்."

தமிழனுக்காக மட்டும் பொங்குறவன் தமிழன் இல்ல,

சேட்டுகாகவும், கேரளாக்காரன், ஆந்தராகாரனுக்கும் வக்காலத்து வாங்குறவன் தான் லே தமிழன்.

நான் சொல்றது நிம்பள்க்கி புர்தா ? இல்லாட்டி இவன் வேர் ஒரு பாஷையிலே சொல்றான் !!! டீக் ஹை ??

//பை தி வே , சென்னை எக்ச்ப்ரெஸ் ல படுக்கோன் அழகா இருந்தாங்க.....படம் ஒரு திராபை. காட்டு மொக்கை //